Last Updated : 13 Sep, 2025 05:13 PM

17  

Published : 13 Sep 2025 05:13 PM
Last Updated : 13 Sep 2025 05:13 PM

மணிப்பூரில் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருந்தது கேலிக்கூத்து: கார்கே விமர்சனம்

புதுடெல்லி: மணிப்பூர் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெறும் 3 மணி நேரமே இருந்தது கேலிக்கூத்து என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "மணிப்பூரில் நீங்கள் 3 மணி நேரம் மட்டுமே இருந்தது இரக்கம் அல்ல - இது கேலிக்கூத்து, அடையாளத்துக்கான பயணம், காயமடைந்த மக்களுக்கு பெரிய அவமானம். சுராசந்த்பூர் மற்றும் இம்பாலுக்கான உங்களின் ரோடு ஷோ, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதில் இருந்து கோழைத்தனமாக தப்பிக்கும் உத்தி அன்றி வேறில்லை.

மணிப்பூரில் 864 நாட்கள் வன்முறை நிகழ்ந்தது, 300 பேர் உயிரிழந்தனர், 67,000 பேர் இடம்பெயர்ந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர். நீங்கள் இந்தக் காலகட்டத்தில் 46 வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டீர்கள். ஆனால், சொந்த நாட்டு மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்க ஒருமுறைகூட வருகை தரவில்லை. மணிப்பூருக்கு நீங்கள் கடைசியாக வந்தது, ஜனவரி 2022 - தேர்தலுக்காக.

உங்கள் இரட்டை இன்ஜின் மணிப்பூரின் அப்பாவி மக்களின் வாழ்க்கையை சூறையாடிவிட்டது. நீங்களும் அமித் ஷாவும் அனைத்து சமூகங்களையும் காட்டிக்கொடுத்தீர்கள். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதன் மூலம், நீங்கள் விசாரணையில் இருந்து பாதுகாப்பு பெற்றுவிட்டீர்கள். ஆனால், வன்முறை இன்னும் தொடர்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை ரோந்துக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. குறுகிய நேர பயணத்தின் மூலம் நீங்கள் தெரிவித்தது வருத்தமும் அல்ல, குற்ற உணர்வும் அல்ல. நீங்கள் உங்களுக்காக ஒரு பிரம்மாண்ட வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்தீர்கள். துன்பப்படுபவர்களின் காயங்கள் மீது விழுந்த பலத்த அடி இது. உங்கள் சொந்த வார்த்தைகளில் கேட்கிறேன், உங்கள் ராஜதர்மம் எங்கே?" என கார்கே கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x