Published : 13 Sep 2025 08:27 AM
Last Updated : 13 Sep 2025 08:27 AM
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன் நகரை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்தேன்.
அதில் குறிப்பிட்ட பங்கு சந்தையில் 250 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்தால் அதிக அளவிலான வட்டியுடன் சேர்த்து, பணத்தை 100 நாட்களில் திரும்ப பெறலாம் என கூறப்பட்டிருந்தது.
வாலித் என்பவர் தொடர்புகொண்டு அவரது நிறுவனத்தின் வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தார். பின்னர் ஜூம் வீடியோ மூலமாக பங்கு சந்தை பயிற்சி வழங்கினர். அதன் அடிப்படையில் 2 தவணையாக ரூ. 3 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரத்து 121-ஐ அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்தேன். ஆனால் 100 நாட்களுக்கு பின்னர் எனது பணமும், லாபமும் திரும்ப தரவில்லை” என கூறியிருந்தார்.
இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்று ஏஐ டீப் ஃபேக் (AI Deep fake ) வீடியோ உருவாக்கி, மோசடி செய்தது தெரியவந்தது. இதே போல நிறைய பேரை அந்த கும்பல் ஏமாற்றியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி, பணத்தை திரும்ப பெற முயற்சித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT