Published : 13 Sep 2025 12:17 AM
Last Updated : 13 Sep 2025 12:17 AM

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

புதுடெல்லி: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார். அங்கு ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி - மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு பிரிவுகளையும் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், இனக் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார். இதுகுறித்து தலைநகர் இம்பாலில் மாநில தலைமைச் செயலர் புனித்குமார் கோயல் நேற்று கூறியதாவது:

மிசோரம் மாநிலத்தில் பைரபி - சாய்ரங் ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி 13-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 12.30 மணிக்கு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்துக்கு வருகிறார். அங்கு குகி - மைத்தேயி கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களிடம் உரையாடுகிறார்.

பின்னர், ரூ.7,300 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைதி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அங்கிருந்து, தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிற்பகல் 2.30 மணி அளவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகை, மணிப்பூரில் முழு அமைதி ஏற்படவும், இயல்புநிலை திரும்பவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘பிரதமர் மணிப்பூர் செல்வது வரவேற்கத்தக்கது’ என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு மணிப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x