Published : 12 Sep 2025 06:22 PM
Last Updated : 12 Sep 2025 06:22 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜூனாகத் நகருக்கு வருகை தந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) மணிப்பூர் செல்ல உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மணிப்பூரில் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அவர் இப்போது அங்கு செல்வது நல்லது. ஆனால், நாட்டின் முக்கிய பிரச்சினை வாக்கு திருட்டுதான். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் மக்கள் ‘வாக்கு திருட்டு’ பற்றித்தான் பேசுகிறார்கள்” என கூறினார்.
அதேநேரத்தில், தாமதமான மற்றும் குறைந்த நேரம் மட்டுமே செலவிடும் பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 7-ம் தேதி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மணிப்பூருக்கு செல்ல உள்ளது குறித்து அவரை புகழ்ந்து பேசும் சில தலைவர்கள்தான் வரவேற்று வருகின்றனர். ஆனால், அவர் அங்கு சுமார் 3 மணி நேரம் மட்டுமே. ஆம், வெறும் 3 மணி நேரம் மட்டுமே செலவிடுவார் என்று தெரிகிறது.இவ்வளவு அவசரமான பயணத்தால் அவர் என்ன சாதிக்க விரும்புகிறார்?
நீண்ட, வேதனையான 29 மாதங்களை சுமந்து கொண்டிருக்கும் அம்மாநில மக்களுக்கு இது ஒரு அவமானம். உண்மையில் பிரதமரின் மணிப்பூர் பயணம் ஒரு பயணமே அல்ல. மணிப்பூர் மக்கள் மீதான அவரது அலட்சியத்தையும் உணர்வின்மையையுமே இது காட்டுகிறது.” என விமர்சித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT