Published : 12 Sep 2025 08:52 AM
Last Updated : 12 Sep 2025 08:52 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியதில் முக்கிய சாலைகள் உட்பட பல இடங்களில் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விஜயவாடா - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தெலங்கானாவில் பெய்து வரும் கன மழை மற்றும் மின்னல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கத்வால் மாவட்டம், பூம்பூர் கிராமத்தில் புதன் கிழமை மாலை தொடர் மழை காரணமாக வயலில் கூலி வேலை பார்த்து வந்த 7 தொழிலாளர்கள் பனை மரத்தின் கீழ் ஒதுங்கினர்.
அப்போது மின்னல் தாக்கியதில் சர்வேஷ், பார்வதி மற்றும் சவுபாக்கியா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதேபோன்று நிர்மல் மாவட்டத்தில் வெங்கட், எல்லைய்யா மற்றும் இவரது மனைவி எல்லம்மா ஆகிய மூவரும், மின்னல் தாக்கி இறந்தனர். கம்மம் மாவட்டம், சத்யநாராயணபுரம் கிராமத்தில் மகேஷ் மற்றும் வீரபத்ரய்யா எனும் விவசாயிகள் இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT