Published : 12 Sep 2025 08:09 AM
Last Updated : 12 Sep 2025 08:09 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகேயுள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவராக மூகாம்பிகை அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய 3 தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார். கொல்லூர் மூகாம்பிகையை வணங்கியதால் தனது வாழ்வில் அதிசயங்கள் நிகழ்ந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா பல முறை தெரிவித்துள்ளார்.
அவர் அடிக்கடி அங்கு சென்று மூகாம்பிகையை வழிபட்டுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா நேற்றுமுன் தினம் தனது மகன் கார்த்திக் ராஜா, அவரது பேரன் யத்தீஸ்வர் ஆகியோருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயி லுக்கு வந்தார். அப்போது அம்மனுக்கு 2 வைர கிரீடங்கள், வைர நெக்லஸ், வீரபத்ர தேவர் சுவாமிக்கு தங்க வாள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.
இந்த ஆபரணங்களை பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகிகள், அவற்றை கோயிலை சுற்றி ஊர்வலமாக மேள தாளம் முழங்க எடுத்து சென்றனர். பின்னர், கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடத்தையும் வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளையும் அணிவித்து, இளையராஜா பெயரில் சிறப்பு பூஜை செய்தனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகள் சார்பில் இளையராஜா, அவரது மகன் கார்த்திக் ராஜா, அவரது பேரன் யத்தீஸ்வர் ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், “இசைஞானி இளையராஜா மூகாம்பிகையின் தீவிர பக்தர். அம்மனை போற்றி விலை மதிப்பற்ற பாடல்களை இயற்றியுள்ளார். இப்போது ரூ.4.5 கோடி மதிப்பில் வைர, தங்க ஆபரணங்களை அம்மனுக்கு வழங்கியுள்ளார்.
திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்த காணிக்கையை அவர் வழங்கியுள்ளார். இளையராஜாவுக்கு மூகாம்பிகை அம்மன் எல்லாவிதமான நன்மைகளையும் புரிவார். கோயில் நிர்வாகிகள் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT