Published : 12 Sep 2025 07:44 AM
Last Updated : 12 Sep 2025 07:44 AM
வாராணசி: பிரதமர் நரேந்திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்மூலம் வாராணசியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்மூலம் 8 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று உத்தர பிரதேசத்தின் வாராணாசிக்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு வாராணசி சென்றார்.
வாராணசி தாஜ் ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். அப்போது விண்வெளி, வேளாண்மை, அறிவியல்-தொழில்நுட்பம், கடல்சார் ஆராய்ச்சி, நீர்நிலைகள் குறித்த ஆராய்ச்சி, அரசு ஊழியர்களுக்கான திறன்சார் பயிற்சி, மின்சார உற்பத்தி, குறு-சிறு தொழிற்சாலைகள் மேம்பாடு, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது உட்பட இருநாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக உயர்க் கல்வி தொடர்பாக சென்னை ஐஐடி, மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும் மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மொரீஷியஸ் நாட்டில் குடியேறினர். இன்றளவும் அந்த நாட்டில் இந்திய கலாச்சாரம் நீடித்து நிலைத்திருக்கிறது. இந்தியாவும் மொரீஷியஸும் நட்பு நாடுகள் மட்டுமன்றி, ஒரு குடும்பத்தை சேர்ந்தவை.
ஆராய்ச்சி, கல்வி, புதுமை கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். தற்போது மொரீஷியஸ் தேசத்தந்தை ஷிவ்சாகர் ராம்கூலத்தின் 125 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். அவரது நினைவாக இந்தியாவின் சார்பில் மொரீஷியஸ் நாட்டில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிக் கொடுக்கப்படும்.
இந்தியாவின் சார்பில் மொரீஷியஸுக்கு 100 மின்சார பஸ்கள் வழங்கப்படும். 17.5 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுக்கப்படும். மொரீஷியஸின் 500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் திறன்சார் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் பேசும்போது, “கல்வி, சுகாதாரம், கட்டுமானம், மரபுசாரா எரிசக்தி, கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் உதவிகளால் மொரீஷியஸ் மக்களின் வாழ்க்கைத் தரம்மேம்பட்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
வாகன உற்பத்தி மையம் இந்தியா: இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை வாசிக்கப்பட்டது. அதில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சுயசார்பு இந்தியா திட்டத்தில் மத்திய அரசோடு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கைகோக்க வேண்டும். சுயசார்பு திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் வாகன உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பது உறுதி. அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்”என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT