Published : 12 Sep 2025 07:39 AM
Last Updated : 12 Sep 2025 07:39 AM
இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல வாய்ப்புள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று உத்தராகண்ட் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி மற்றும் மைத்தேயி இனத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பயங்கர கலவரமாக தொடர்ந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்குப் பின் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. இந்நிலையில் மிசோரம் மாநிலத்திலிருந்து, பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்லா கோட்டை அருகில் உள்ள அமைதி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமைதி மைதானம் செல்லும் சாலைகளில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.
மணிப்பூரின் பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தற்காலிக பரிசோதனை மையங்களையும் மத்திய, மாநில போலீஸார் அமைத்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கடந்த 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT