Published : 11 Sep 2025 02:52 PM
Last Updated : 11 Sep 2025 02:52 PM
திருவனந்தபுரம்: பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்தார். ஓணம் மரபுகளை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய கேரள வருகையின் போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்கினை பெறுவதையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதையும் பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் இந்த பேச்சு தெளிவுபடுத்துகிறது.
அவர்கள் ஒரு அரசியல் கட்சி, எனவே இயல்பாகவே அவர்கள் முயற்சி செய்வார்கள். ஆனால் நாம் பார்க்க வேண்டியதும் புரிந்து கொள்வதும் என்னவென்றால், பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த உணர்தல் நம் சமூகத்தில் இருக்க வேண்டும்.
ஓணம் நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் வாக்குகளைப் பெறும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை உணர வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT