Published : 11 Sep 2025 09:14 AM
Last Updated : 11 Sep 2025 09:14 AM
புதுடெல்லி: நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை அங்கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் அழைத்துவர ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களில் சிலர் அமராவதியில் உள்ள ஆந்திர அதிகாரிகளை தொடர்புகொண்டு தங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில கல்வித்துறை அமைச்சருமான லோகேஷ், உடனடியாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அமராவதியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேசினார்.
காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆந்திராவை சேர்ந்த மொத்தம் 240 பேர் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களிடம், ‘‘உங்களை விமானம் மூலம் மீட்கிறோம். அதுவரை நீங்கள் தங்கியுள்ள அறைகளை விட்டு வெளியே வர வேண்டாம்’’ என லோகேஷ் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் லோகேஷ் பேசுகையில், “நேபாளத்தில் 240 ஆந்திர மக்கள் சிக்கி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க விரைவில் தனி விமானம் அனுப்பி வைக்கப்படும். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விசாகப்பட்டினம் அழைத்து வரப்படுவர்” என்றார்.
தெலங்கானாவை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோரும் நேபாள கலவரத்தில் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கென டெல்லியில் உள்ள தெலங்கானா பவன் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை இணையத்தில் தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. இவர்கள் தனி விமானம் மூலம் ஹைதராபாத் அழைத்து வரப்படுவார்கள் என தெலங்கானா அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த ஒருவரிடம் நேற்று வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் பேசிய அமைச்சர் லோகேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT