Last Updated : 10 Sep, 2025 05:43 PM

16  

Published : 10 Sep 2025 05:43 PM
Last Updated : 10 Sep 2025 05:43 PM

அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை ஆளுநர் மறுக்க முடியும் என்றும், அரசியலைப்பை பாதுகாக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றம் குடியரசு தலைவர் ஆகியோருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் கோரி இருந்தார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.

இன்றைய நீதிமன்ற விசாரணையின்போது, பஞ்சாப் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தெலங்கானா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, மேகாலயா சார்பில் அட்வகேட் ஜெனரல் அமித் குமார், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி தத்தமது வாதங்களை முன்வைத்தார்.

நிரஞ்சன் ரெட்டி தனது வாதத்தில், “75 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்கள் பிரிவினைவாத அரசியலை முன்வைத்தபோது, அதை தடுக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இருந்த நிலை இப்போது இல்லை. எனவே, ஆளுநருக்கு அதிக அதிகாரங்களைக் கொடுப்பது, மாநிலங்களின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்துவிடும். இது ஏற்புடையது அல்ல.” என தெரிவித்தார்.

பி. வில்சன் தனது வாதத்தில், “ஒரு மசோதா என்பது ஒரு அரசியல் விருப்பம். ஆளுநர் அரசியலமைப்பு நீதிமன்றத்தைப் போல செயல்பட்டு மசோதா குறித்து தீர்ப்பளிக்க முடியாது.” என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதத்தில், “ஒரு மசோதாவை காலவரையறை இன்றி கிடப்பில் போடும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்பதல்ல எனது வாதம். பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 4 விருப்பங்கள் உள்ளன.

ஆளுநருக்கு எந்த விருப்ப உரிமையும் இல்லை என்று வாதிடும் நிலைக்கு மாநிலங்கள் வந்துவிட்டன. அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டுவர் என்றும் அவர் ஒரு தபால்காரர் மட்டுமே என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் இது குறைபாடு உள்ள வாதம்.

ஆளுநர் சட்டப்பேரவையில் வாக்களிக்கும் உரிமை இல்லாதவராக இருக்கலாம். ஆனாலும் அவர் சட்டமன்றத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவடைகிறது. அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை ஆளுநருக்கு இருக்கிறது. அவர் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் தனது மறைமுக விருப்புரிமையைப் பயன்படுத்துகிறார்.

ஆளுநர் அரசாங்க ஊழியர் அல்ல. அவர் ஒரு சுயாதீன அரசியலைப்பு பதவி வகிப்பவர். அது இல்லாமல் மாநிலத்தில் எந்த சட்டமும் இருக்க முடியாது. மாநில சட்டமன்றம் ஒருபோதும் ஆளுநரின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என மறுக்க முடியாது.

பொதுவாக ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அவர் ஒரு சூப்பர் முதல்வர் அல்ல. அதேநேரத்தில், அவரது பங்கு மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படுவதாகும். சில நேரங்களில் சூழ்நிலை கருதி அவர் மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாகச் செயல்படலாம்.

சில சூழ்நிலைகளில் அவர் ஒப்புதலை மறுக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. மாநில சட்டமன்றம் அவரை கட்டாயப்படுத்த முடியாது. சில நேரங்களில் அரசியலமைப்பைப் பாதுகாக்க மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் சூழ்நிலைகள் உள்ளன. உதாரணத்துக்கு, பஞ்சாப் சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் நிலம் தொடர்பாக 2016-ல் பஞ்சாப் அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை கூறலாம்.

இந்த மசோதா சட்டமாக மாறினால், கூட்டாட்சி முறையை பாதித்திருக்கும். மத்திய - மாநில அரசுகளின் நலன்கள் மோதலில் இருக்கும்போது ஆளுநர், நடுநிலை வகிக்கும் நடுவராக செயல்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு ஆளுநரை அரசியல் அழுத்தங்களால் அசைக்க முடியாது. அரசியலமைப்பை நிலைநிறுத்துவதே அவரது கடமை.” என தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x