Published : 10 Sep 2025 07:58 AM
Last Updated : 10 Sep 2025 07:58 AM
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வருபவர் ரவிந்தர் சிங் சவுகான் (30). இவருக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வருமான வரித் துறையிலிருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அவருக்கோ அவரது மனைவிக்கோ ஆங்கிலம் தெரியாது என்பதால், அந்த நோட்டீஸை புறக்கணித்துவிட்டனர்.
பின்னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறையாக நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து, ஆங்கிலம் தெரிந்தவர்களின் உதவியை நாடி உள்ளார். அப்போது, வருமான வரித் துறையின் குவாலியர் கிளையில் இருந்து வந்த அந்த நோட்டீஸில் 2020-21 நிதியாண்டுக்கு வருமான வரி பாக்கி ரூ.46 கோடியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் வழக்கறிஞர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து சவுகானின் வழக்கறிஞர் பிரதுமான் சிங் பதோரியா கூறும்போது, “கடந்த 2019-ம் ஆண்டு குவாலியர் சுங்கச் சாவடி அருகே உள்ள ஒரு உணவகத்தில் உதவியாளராக சவுகான் பணிபுரிந்துள்ளார்.
அப்போது அங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஒருவர், பி.எப். கணக்கு தொடங்குவதாகக் கூறி சவுகானின் வங்கிக் கணக்கு, ஆதார் விவரத்தை பெற்றுள்ளார்.
இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி யாரோ வங்கிக் கணக்கு தொடங்கி அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தி்ல் புகார் செய்துள்ளோம். இந்த குற்றம் டெல்லியில் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, டெல்லியில் புகார் செய்ய வேண்டி உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT