Published : 10 Sep 2025 08:51 AM
Last Updated : 10 Sep 2025 08:51 AM
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
டெல்லியில் நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட நேற்று மாலை இமாச்சல் பிரதேசம் புறப்பட்டார். நேற்று மதியம் 1.30 மணியளவில் காங்கரா பகுதிக்கும் வந்த பிரதமர் மோடி மண்டி, குல்லு ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் மாநில உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் மாநில ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். அவருக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து அதிகாரிகள் விளக்கினர். இங்கு மொத்தம் 370 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 205 பேர் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு பாதிப்பால் உயிரிழந்தனர். 165 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வெள்ளத்தில் சிக்கி குடும்பத்தினரை இழந்த 11 மாத குழந்தை நீத்திகாவையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த குழந்தை தற்போது உறவினர்களின் பாதுகாப்பில் உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில குழுவினரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிவாரணம் அறிவிப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிவாரண நிதி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இங்கு வீடுகளை இழந்த மக்களுக்கு, பிரதமரின் ஆவாஸ் யோஜனா மூலம் வீடு கட்டி தரப்படவுள்ளது. சேதம் அடைந்த நெடுஞ்சாலைகள், பள்ளிகள் ஆகியவற்றை மீண்டும் உருவாக்க பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதி அளிக்கப்படவுள்ளது. நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு தேவயான உதவிகளும் அளிக்கப்படவுள்ளன. சேதம் அடைந்த நீர்நிலைகளும் சீர்படுத்தப்படுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பஞ்சாப் புறப்பட்டார். குர்தாஸ்பூரில் நேற்று மாலை 4.15 மணிக்கு நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அம்மாநிலத்துக்கு ரூ.1600 கோடி நிதியுதவி அறிவித்தார். பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இழப்பீடு: வெள்ளத்தில் உயிரிழந்தவர் களுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோ ருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT