Published : 10 Sep 2025 08:34 AM
Last Updated : 10 Sep 2025 08:34 AM
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அர்விந்த் ஹைதராபாத்தில் கீதா ஆர்ட்ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவற்றின் அலுவலக கட்டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்துக்கு 4 அடுக்குகள் மட்டுமே கட்ட ஹைதராபாத் மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லு அர்விந்துக்கு ஹைதராபாத் மாநகராட்சி திட்ட அதிகாரி நேற்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். அதில், “நிபந்தனைகளை மீறி கட்டப்பட்ட 5-வது மாடியை நாங்கள் ஏன் இடிக்க கூடாது?” என விளக்கம் கோரியுள்ளார்.
அல்லு அர்விந்தின் தாயார் சமீபத்தில் தான் மரணமடைந்தார். 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். அவரது மகன் இன்னமும் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT