Published : 10 Sep 2025 12:22 AM
Last Updated : 10 Sep 2025 12:22 AM
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதையடுத்து, அப்பதவிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ம் தேதி நிறைவு பெற்றது. ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர் களமிறங்கினர்.
மொத்தம் 12 எம்.பி.க்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். மாலை 5 மணி நேர நிலவரப்படி 767 வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஓர் உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. அதேபோல, தற்போது 233 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர, 12 நியமன எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி அரங்குக்கு வந்து, தனது வாக்கைச் செலுத்தினார். முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) எம்.பி.யுமான எச்.டி.தேவகவுடா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோரும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா தொகுதியின் சுயேச்சை எம்.பி.யான ரஷீத், பரோலில் வந்து வாக்களித்தார்.
வாக்கு எண்ணிக்கை...மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தின் எஃப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 782 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதாவது 98 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை சுமார் 7.30 மணியளவில் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது. எண்ணிக்கையின் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், இண்டியா கூட்டணி வேட்பாளர் 300 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றியைப் பெற்று, நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது பதவிப்பிர மாணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாநிலங்களவை பொதுச் செயலர் பி.சி.மோடி கூறும்போது, “மொத்தம் 767 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 752 வாக்கு கள் செல்லத்தக்கவையாகவும், 15 வாக்குகள் செல்லாதவையாகவும் அறிவிக்கப்பட்டன. இதன்படி 377 வாக்குகள் பெற்றிருந்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதிக வாக்குகளைப் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெருவெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்துக்கு சேவை செய்வதற்கும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதற்காக சிறந்த குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என நம்புகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT