Published : 09 Sep 2025 06:53 PM
Last Updated : 09 Sep 2025 06:53 PM
புதுடெல்லி: நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாள தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் காத்மாண்டுவுக்கான தங்கள் சேவைகளை ரத்து செய்தன.
போராட்டக்காரர்களால் ஏற்பட்ட தீயினால் உருவான புகை மூட்டத்தால், காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, "காத்மாண்டுவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல்லி - காத்மாண்டு - டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218 மற்றும் AI211/212 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று இண்டிகோ தனது அறிக்கையில், "காத்மாண்டுவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காத்மாண்டுக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT