Published : 09 Sep 2025 12:54 PM
Last Updated : 09 Sep 2025 12:54 PM
புதுடெல்லி: "முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக வழக்கத்திற்கு மாறான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 50 நாட்களாக ஜெகதீப் தன்கர் வழக்கத்திற்கு மாறான மவுனத்தை கடைபிடித்து வருகிறார். இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மோடி அரசாங்கத்தால் விவசாயிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுவது குறித்தும் அதிகாரத்தில் இருப்பவர்களின் அகங்காரம் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்திய பிறகு குடியரசு துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தவர் ஜெகதீப் தன்கர். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT