Published : 08 Sep 2025 09:01 AM
Last Updated : 08 Sep 2025 09:01 AM
புதுடெல்லி: பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் பாஜகவின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இதில், ஜிஎஸ்டியில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். முதல் நாளான நேற்று இரண்டு முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2027-க்குள் முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதற்கான பாதைகளை வகுப்பது மற்றும் சமூக வலைதளங்களை பாஜக எம்பிக்கள் திறம்பட கையாளுவது எப்படி என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், மதியத்துக்குப் பிறகான கூட்டத்தில், வேளாண், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, ரயில்வே, போக்குவரத்து ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து பாஜக எம்பிக்கள் குழுக்களாக கூடி விவாதம் நடத்தினர். 2-வது பயிற்சி நாளான இன்று, செப். 9-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பாஜக எம்பிக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
குடியரசு துணைத் தலைவர்: செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன்ரெட்டி (80) போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் (67) உள்ளார். இவர்கள் இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு. அதிலும், ராதாகிருஷ்ணன் தமிழகத்தையும், சுதர்சன் ரெட்டி ஆந்திராவையும் சேர்ந்தவர்கள்.
ராதா கிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார். இவர் வாஜ்பாய் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வானவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து 2011 ஜூலையில் ஓய்வு பெற்றவர் சுதர்சன் ரெட்டி. இவர் நீதிபதியாக பணியாற்றியபோது, கருப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மத்திய அரசை விமர்சித்து பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT