Published : 08 Sep 2025 08:56 AM
Last Updated : 08 Sep 2025 08:56 AM
ராஞ்சி: உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த ராமச்சந்திர ராம், ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்தில் பெய்த கனமழையால் இவர்கள் தங்கியிருந்த குடிசை சேதமடைந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். ஒரு மாதம் முன்பு 5-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதிலிருந்து தேவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், தங்களுடைய ஒருமாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவலை அறிந்த முதல்வர் ஹேமந்த் சோரன், விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, லெஸ்லிகஞ்ச் காவல் நிலைய குழுவினர் விசாரணையில் இறங்கினர். பின்னர் லடேஹர் மாவட்டத்தில் குழந்தையை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது, ராம் தம்பதியிடம் நடத்திய விசாரணையில், ஆதார் மற்றும் குடும்ப அட்டை இல்லாததால் அரசின் நலத்திட்டங்களை அவர்களால் பெற முடியவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அந்த தம்பதிக்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT