Published : 08 Sep 2025 06:56 AM
Last Updated : 08 Sep 2025 06:56 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் மாதோபட்டி, தேசிய அளவில் இடம் பிடித்துள்ளது. கடந்த நூற்றாண்டில், இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் என 50-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியாவின் ஐஏஎஸ் தொழிற்சாலை என்ற புனைப் பெயரை மாதோபட்டி பெற்றுத் தந்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கடந்த 1914-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற முகமது முஸ்தபா ஹுசைன், மாதோபட்டி கிராமத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்தார். இது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அடுத்தடுத்து பலர் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.
1950-களில் மாதோபட்டியைச் சேர்ந்த இந்து பிரகாஷ் சிங் முதல் ஐஎப்எஸ் அதிகாரியானார். இதுபோல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினய் குமார் சிங், சத்ரபால் சிங், அஜய் குமார் சிங் சஷிகாந்த் சிங் ஆகிய 4 சகோதரர்கள் குடிமைப் பணி அதிகாரிகளாக தேர்வாகி அந்த கிராமத்துக்கு மகுடம் சூட்டினர்.
குடிமைப்பணிக்கான பயிற்சி மையம் எதுவுமே இல்லாவிட்டாலும் மாதோபட்டி கிராம இளை ஞர்கள் சத்தமின்றி சாதனை படைத்து வருகின்றனர். குடிமைப் பணி தேர்வில் ஏற்கெனவே வெற்றி பெற்று பதவியில் இருப்பவர்கள் இளைஞர்களுக்கு புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் உத்திகள் மூலம் வழிகாட்டுதல் வழங்கி வருகின்றனர். பள்ளிப் பருவத்திலிருந்தே குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகத் தொடங்கி விடுகின்றனர்.
இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களிலும் இந்த கிராமத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு லட்சியம் நிறுவனங்களால் அல்லாமல்,சமூகத்தால் வளர்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT