Published : 07 Sep 2025 11:28 PM
Last Updated : 07 Sep 2025 11:28 PM
சென்னை: 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு உத்தராகண்டில் அமைந்தது. அப்போது முதல் மக்கள் நலத்திட்டங்களையும், ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் புஷ்கர் சிங் தாமி அரசு நிறைவேற்றி வருகிறது.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு இங்கு அமைந்த பின்னர், தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டி கசிவதைத் தடுக்க வகை செய்யும் மோசடி எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் உத்தராகண்ட் மாநிலத்தில் எந்தவிதமான அரசுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவதும் தடுக்கப்பட்டது.
மேலும், திறன் வளர்ப்பு, உலக அளவிலான வேலைவாய்ப்புத் திட்டத்தை உத்தராகண்ட் அரசு சிறப்பான முறையில் அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தராகண்டின் பழங்குடியினர் நலத்துறை நடத்தும், அரசு ஆசிரம முறையிலான பள்ளிகளில் 15 உதவி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி வழங்கினார்.
இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சிறப்பு நோக்குடன் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை உத்தராகண்ட் அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் இளைஞர்கள் உத்தராகண்ட் மாநில பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மேலும் உத்தராகண்ட் உதவி சேவைத் தேர்வு ஆணையம், உத்தராகண்ட் மாநில மருத்துவ சேவைகள் தேர்வு ஆணையத்தின் கீழும் ஏராளமான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசின் கீழ் செயல்படும் பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் இளைஞர்கள் அரசு வேலைகளுக்கு தற்போதுதேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இன்னும் சில தேர்வாணையங்கள் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான இறுதி பரிந்துரை விரைவில் வரவுள்ளது. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, முதல்வரின் திறன் வளர்ப்பு மற்றும் உலக வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஓட்டல்கள், நர்சிங், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இதில் 154 இளைஞர்கள் பயிற்சி பெற்று 37 பேர் ஏற்கெனவே ஜப்பானில் வேலை பார்த்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT