Published : 07 Sep 2025 07:40 PM
Last Updated : 07 Sep 2025 07:40 PM
வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவால் பணியமர்த்தப்பட்ட அரசியல் தரகர் / உத்தி வகுப்பாளர் ஜேசன் மில்லர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை சந்தித்துள்ளார்.
எஸ்ஹெச்வி பார்ட்னர்ஸ் (SHW Partners LLC) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜேசன் மில்லர். இவர் கடந்த ஏப்ரலில் இந்திய தூதரகத்தால், இந்தியாவுக்கான அரசியல் தரகராக (லாபியிஸ்ட்) நியமிக்கப்பட்டார். இதற்காக இவருக்கு ஆண்டுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது.
ட்ரம்ப்பை சந்தித்ததை மில்லர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், எந்த விஷயத்துக்காக இந்தச் சந்திப்பு நடந்தது என்பதை மில்லர் தெரிவிக்கவில்லை. எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களில், “வாஷிங்டன்னில் பிரமாதமான வாரம். அதிபரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பணியை சிறப்பாக முன்னெடுங்கள் ட்ரம்ப்” என்று அவரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
ஜேசன் மில்லர் நியமனம் குறித்து கடந்த மே மாதம் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதுவொன்றும் புதிய நடைமுறையில்லை. 1950 முதலே இந்தியாவில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்களாலும் இத்தகைய அரசியல் தரகர்கள் பணியில் இருந்துள்ளனர். இது போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும். தேவைப்படும் போது அவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இது போன்ற தரகர்களை பயன்படுத்துவது தொடர்பான அனைத்து நிகழ்வுகள் பற்றி தரவுகளும் பொது வெளியிலேயே உள்ளனர். 2007-ல் அணுசக்தி கொள்கை உடன்பாடு தொடங்கி பல்வேறு தருணங்களிலும் இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை எடுத்துரைக்க இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் இது போன்று லாபியிஸ்ட்களை பயன்படுத்துவது என்பது காலங்காலமாகவே நடைமுறையில் உள்ள ஒன்றாகும்” எனக் கூறியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
இந்தியா - அமெரிக்கா வரி சர்ச்சை பின்னணி: உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திடீர் பாசம் - ஆனால், அண்மையில் ட்ரம்ப்பிடம் இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர், “இதை நான் கண்டிப்பாக செய்வேன். பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் மிகச் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது சக்தி வாய்ந்த உறவு, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு நீண்டகாலமாக உள்ளது. எப்போதாவதுதான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். ரஷ்யாவில் இருந்து இந்தியா இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். நான் அதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். நாங்கள் இந்தியாவின் மீது மிகப் பெரிய வரியை விதித்தோம். 50 சதவீதம் மிக அதிகமான வரி” என்று கூறினார்.
ஆனால் அதே வேளையில், இந்தியா இப்போது அமெரிக்க பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி என்று கூறுகிறது. காலம் கடந்துவிட்டது என்றும் கூறிவருகிறார்.
"அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த அவரது நேர்மறையான வெளிப்பாட்டையும் மிகவும் பாராட்டுகிறேன். இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்நோக்கு மிக்க விரிவான மற்றும் உலகளாவிய பயனுள்ள கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று பிரதமர் மோடியும் கூறினார்.
இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடம் ஜேசன் மில்லர் சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது ஜேசன் மில்லர் தீவிர ட்ரம்ப் அனுதாபி என்பது. 2020, 2024 தேர்தல்களில் இவர் ட்ரம்ப்புக்காக பிரச்சாரமும் செய்துள்ளார். குடியரசுக் கட்சி அரசியல்வாதியான டெட் க்ரூஸ், நியூயார்க் நகர முன்னாள் மேயர் ரூடி கிலானி, கெண்டக்கி முன்னாள் ஆளுநர் மேட் பெவின் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அலுவலகத்தில் தொடர்புகள் துறை இயக்குநராகிவிட வேண்டும் என்பது இவரது இலக்காக இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால், 2020-ல் இவர் சொந்தமாக ஒரு லாபி நிறுவனத்தை உருவாக்கி இயங்கி வருகிறார். இவரை கடந்த ஏப்ரல் மாதம் ஓராண்டு ஒப்பந்தத்தில் இந்தியா பணியமர்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT