Published : 06 Sep 2025 02:09 PM
Last Updated : 06 Sep 2025 02:09 PM
புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்காவுடனான நமது நல்லுறவுக்கு பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அதிபர் ட்ரம்ப் விஷயத்தில், பிரதமர் மோடி எப்போதும் மிகச் சிறந்த தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டுள்ளார். ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது” என்று அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது தொடர்பாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் “இருண்ட சீனாவிடம் இந்தியாவை இழந்துவிட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், "நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை.” என்று கூறினார்.
ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, “அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறேன், முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய நல்லுறவை கொண்டுள்ளன.” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT