Published : 06 Sep 2025 09:04 AM
Last Updated : 06 Sep 2025 09:04 AM
புதுடெல்லி: மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்ளிட்டோருக்கு சவாலாக இருந்தவர் அருண் காவ்லி (76). இவர் தனது ஆதரவாளர்களால் ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் வசித்த மும்பை, பைகுல்லா பகுதியின் தக்டி சாலை இவரது கோட்டையாக இருந்தது. ஓர் எளிய மராத்தி குடும்பத்திலிருந்து உயர்ந்து மும்பை தாதாக்கள் உலகில் கொடிகட்டிப் பறந்த காவ்லியின் வாழ்க்கை திரைப்படக்கதைகள் போல் உள்ளது.
மெட்ரிக் படிப்புக்குப் பிறகு சிறு வயதிலேயே காவ்லி குற்ற உலகில் நுழைந்தார். 1980-களில், தனது நண்பர் ராமா நாயக் கும்பலுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவருக்கு தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் மும்பை நிழல் உலகில் வளர்ந்து வரும் தாதாக்களாக இருந்தனர்.
தாவூத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு காவ்லிக்கு வழங்கப்பட்டது. இந்த நட்பு சிறிது காலம் நீடித்தது, ஆனால் கடந்த 1988-ல் தாதாக்களுக்கு இடையிலான மோதலில் காவ்லியின் நெருங்கிய நண்பர் ராமா நாயக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு தாவூத் இப்ராஹிம் காரணம் என காவ்லி சந்தேகித்தார். இது காவ்லியை மிகவும் காயப்படுத்தியது.
தாவூத்தை விட்டுப் பிரிந்த காவ்லி சொந்த கும்பலை உருவாக்கினார். இதனால் காவ்லி - தாவூத் இடையே மோதல் வலுத்தது. இதில் பல துப்பாக்கிச் சூடு மோதல்களில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
1993 மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு, நிழல் உலக தாதாக்கள் பலரும் மும்பையை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இதன்பின், நிழல் உலகில் மற்றொரு தாதாவாக உருவெடுத்த ரவி பூஜாரி, காவ்லிக்கு எதிராக ஒரு கும்பலை உருவாக்கினார்.
இருவருக்கும் இடையே பல மோதல்கள் நடந்தன. ஆனால் காவ்லிக்கு உள்ளூர் மராத்தி சமூகத்தின் ஆதரவு இருந்தது. இந்தியாவுக்கு வெளியிலிருந்து இயங்கி வந்த சோட்டா ராஜன் போன்ற பெரிய தாதாக்கள் கூட காவ்லியை எதிர்கொள்ள முடியவில்லை. பின்னர், காவ்லி அரசியலில் நுழைந்தார். 2004-ல் அவர் அகில் பாரதிய சேனா (ஏபிஎஸ்) என்ற கட்சியை நிறுவினார். இதன் சார்பில் சின்ச்போக்லியில் வென்று எம்எல்ஏவானார்.
அரசியலிலும் மோதலில் சிக்கிய காவ்லி, 2008-ல் சிவசேனா கவுன்சிலர் கம்லேகர் கொலை வழக்கில் சிக்கினார். இதில் 2012-ல் காவ்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நாக்பூர் மத்திய சிறையில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர், நேற்று உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இவரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மும்பை அரசியலில் காவ்லியின் விடுதலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியான ஏபிஎஸ், நகராட்சித் தேர்தல்களில் புதிய போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT