Published : 06 Sep 2025 09:00 AM
Last Updated : 06 Sep 2025 09:00 AM
புதுடெல்லி: உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியாக 40 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிஉயர்வுக்கு உடல் பருமன் குறைப்பு நிபுணரும், பெங்களூரு ஆஸ்டர் ஒயிட்பீல்ட் மருத்துவமனை ஆலோசகருமான டாக்டர் பசவராஜ் எஸ். கம்பர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கு முக்கிய பங்களிக்கும் சர்க்கரை மற்றும் காஃபின் கொண்ட பானங்களை அதிகமாக உட்கொள்வதைத் தடுப்பதற்காக இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முடிவை நாம் நிச்சயம் வரவேற்க வேண்டும்.
புகையிலை, ஆல்கஹால், சர்க்கரை உணவுகள், கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வால் அதை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக எடை, உடல் பருமன், நீரிழிவு, நீரிழிவு தொடர்பான வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த 40 சதவீத வரி நடவடிக்கை மக்களை தங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளை மேம்படுத்தத் தூண்டக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடல் பருமன் குறைப்பு நிபுணரும், ஜாந்த்ரா ஹெல்த்கேர் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ராஜீவ் கோவில் கூறும்போது, “சர்க்கரை, கார்பனேற்றப்பட்ட மற்றும் ஆற்றல் பானங்கள் மீது 40 சதவீத ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் இந்தியாவில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலானவை அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலால் தூண்டப்படுகின்றன. இந்த பானங்கள் மீதான விலையை உயர்த்துவதன் மூலம், ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது.
வரி அமைப்பை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என 2 முதன்மை அடுக்குகளாக எளிமைப்படுத்தும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை வரவேற்கிறோம். பாக்கெட்டில் வழங்கப்படும் தண்ணீர் மற்றும் காபி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இப்போது விலை மலிவாக இருக்கும். இதனால் நுகர்வோருக்கு மலிவு விலையில், ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. சமூக நல்வாழ்வுக்கு வரிவிதிப்பு எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT