Published : 06 Sep 2025 08:25 AM
Last Updated : 06 Sep 2025 08:25 AM
புதுடெல்லி: மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை திறந்தது. அப்போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்சர் பிரதாப், தனது பேரனுக்கு பரிசாக கொடுப்பதற்காக முன்பதிவு செய்திருந்தார். பசுமை வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை பேரனிடம் ஏற்படுத்துவதற்காக அவர் இந்த காரை பரிசளிப்பதற்கு முடிவு செய்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் பிரதாப் கூறுகையில், ``நாட்டு மக்களிடையே மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே டெஸ்லா காரை வாங்கியுள்ளேன். அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பசுமை வாகனம் குறித்து அதிகம் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் இந்த காரைப் பார்த்து நிலையான போக்குவரத்து குறித்து உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார வாகனங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மகாராஷ்டிர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகவே அடல் சேது மற்றும் சம்ருதி எக்பிரஸ்வே ஆகியவற்றில் சுங்க கட்டணம் விலக்கு உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது.
மகாராஷ்டிர போக்குவரத்து கழகம் (எம்எஸ்ஆர்டிசி) ஏற்கெனவே கிட்டத்தட்ட 5,000 மின்சார பேருந்துகளை பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்காக வாங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT