Published : 06 Sep 2025 08:20 AM
Last Updated : 06 Sep 2025 08:20 AM
பரேலி: கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளார். சமோசா எங்கே என மனைவி கேட்டபோது, வாங்க மறந்து விட்டேன் என சிவம் குமார் கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. மறுநாள் தனது குடும்பத்தினரை வரவழைத்த சங்கீதா, சமோசா விஷயத்தை கூறி, தான் சொல்வதை கணவர் கேட்பதில்லை என புகார் கூறியுள்ளார்.
இது குறித்து சிவம் குமாரிடம் சங்கீதாவின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவம் குமார் கோபத்தில் பதில் அளித்ததால், வாய்த் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. சங்கீதா, அவரது தாய் உஷா, தந்தை ரம்லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து சிவம் குமாரின் தாய் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். காயம் அடைந்த சிவம் குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சமோசா பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தகராறு, அடிதடியில் முடிந்ததாக பிலிப்பித் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT