Published : 05 Sep 2025 07:00 PM
Last Updated : 05 Sep 2025 07:00 PM
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மொரிஷயஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் அரசுமுறைப் பயணமாக வரும் 9-ம் தேதி இந்தியா வருகிறார். 16ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தற்போதைய அவரது பதவிக் காலத்தில் அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர் தனது வருகையின்போது டெல்லி மட்டுமல்லாது, மும்பை, வாரணாசி, அயோத்தி, திருப்பதி ஆகிய நகரங்களுக்கும் செல்கிறார். இதற்கு முன் 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மொரிஷியஸ் பிரதமர்இந்தியா வந்திருந்தார்.” என ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “ஆகஸ்ட் 31 அன்று ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கும் எதிர்க்கட்சிகள் கவனத்துக்கும் இந்திய தூதரகம் கொண்டு சென்றது. அவர்கள், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையை ஆதரிப்பதாகவும், அதை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பையும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, “தவறான அறிக்கைகள் சிலவற்றை அவர் வெளியிட்டிருப்பதைப் பார்த்தோம். அவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்.” என கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "குறைந்த விலையில் புடின் மோடிக்கு கச்சா எண்ணெயை கொடுக்கிறார். அதை இந்தியா சுத்தகரிப்பு செய்து ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகிறது. நான் இந்திய மக்களுக்குச் செல்ல விரும்புவதெல்லாம், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய மக்களின் செலவுகளில் இருந்து பிராமணர்கள் பயனடைகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர இந்தியாதான் நிதி உதவி அளிக்கிறது என்றும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது சரியான நடவடிக்கையே என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT