Published : 05 Sep 2025 09:14 AM
Last Updated : 05 Sep 2025 09:14 AM
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் பிஎஸ் செகண்ட்ரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் 45 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார்.
இந்த சூழலில் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் நல்லாசிரியர்களுக்கு நேற்று சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம், இரட்டை கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி மேலும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய சீர்திருத்தம் ஆகும். தற்போது ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் நவராத்திரியின் முதல் நாளில் அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி இனிமேல் 5 சதவீதம், 18 சதவீதம் என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். புதிய வரி விகிதத்தால் சாமானிய மக்களின் வீட்டுச் செலவு கணிசமாக குறையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அதேநேரம் ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும்.
21-ம் நூற்றாண்டில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிபோது சுயசார்பு இந்தியா குறித்த கருத்துகளை எடுத்துரைத்தேன். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கிறார்.
அந்த குழந்தைக்கு கல்வி போதித்து ஒளிமயமான எதிர்காலத்தை ஆசிரியரே உருவாக்கி கொடுக்கிறார். அந்த வகையில் எதிர்கால இந்தியாவை, ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பணியாற்றும் கோடிக்கணக்கான ஆசிரியர்கள், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT