Published : 05 Sep 2025 07:46 AM
Last Updated : 05 Sep 2025 07:46 AM
புதுடெல்லி: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி பங்கேற்றனர்.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டிஎம்சியின் யூசுப் பதான் மற்றும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பூர்ணியா சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சனும் ராகுலுடன் யாத்திரையில் கலந்து கொண்டார்.
இதனால், வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப் பேரவை தேர்தலுக்காக ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் நிலையை இந்த யாத்திரை வலுப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகள் கூடும் வாய்ப்புகளும் தெரிகின்றன. கடந்த 1989 பாகல்பூர் கலவர வழக்குகளை சரியாக கையாளவில்லை என்பதால், காங்கிரஸிடம் இருந்து முஸ்லிம்கள் விலகத் தொடங்கினர்.
முஸ்லிம் வாக்காளர்கள் பலர் ஆர்ஜேடி.க்கு மாறினர். கடந்த 1990-ல் முதல் முறையாக முதல்வரான லாலு, பிஹார் சிறுபான்மை சமூகத்தின் ஒரு முக்கிய தலைவரானார். இதன் காரணமாக, கடந்த 1990-ம் ஆண்டுக்கு பின் காங்கிரஸுக்கு பிஹாரில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால், சட்டப்பேரவை தேர்தல்களில் லாலுவின் ஆர்ஜேடியுடன் காங்கிரஸ் கைகோத்தது.
ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், 2015-ல் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணியில் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. மீண்டும் நிதிஷ் பாஜகவுடன் இணைந்த பின் 2020 தேர்தலில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19-ல் வெற்றி பெற்றது. அப்போது, 110 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸின் பலவீனமான பிரச்சாரங்களால்தான் மகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT