Published : 05 Sep 2025 07:38 AM
Last Updated : 05 Sep 2025 07:38 AM
அமராவதி: யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்திர அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதனால் இனி ஆந்திர மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, ஆந்திராவில் யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியான புவனேஸ்வரி நடத்தும் என்டிஆர் அறக்கட்டளை இணைந்து இத்திட்டத்தில் பணியாற்றும். இதன்படி, இனி ஆந்திராவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தாருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை எந்தவொரு கார்பரேட் மருத்துவமனைகளிலும் சிகிச்சை, அல்லது அறுவை சிகிச்சையோ இலவசமாக பெறலாம். அதாவது 1.63 கோடி குடும்பத்தாருக்கு ஆந்திராவில் இனி இலவச மருத்துவ சிகிச்சை என்றே கூறலாம். ஆந்திராவில் 2,493 மருத்துவமனைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இதில் 3,257 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும், 2.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கு செலவானால் அது காப்பீடு நிறுவனங்கள் ஏற்கவேண்டும். அதற்கும் மேல், அதாவது ரூ.25 லட்சம் வரை செலவானால் அதனை என்டிஆர் அறக்கட்டளை ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் மதனபல்லி, ஆதோனி, மார்க்காபுரம், புலிவேந்துலா, பெனுகொண்டா, பாலகொல்லு, அமலாபுரம், நர்ஸிபட்டனம், பாபட்லா, பார்வதி புரம் ஆகிய 10 ஊர்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT