Published : 05 Sep 2025 07:00 AM
Last Updated : 05 Sep 2025 07:00 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இதற்கு முன் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் அதிகளவில் மரங்கள் வந்தன.
இதுகுறித்து அனாமிகா ரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், "அதிகளவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள், நெடுஞ்சாலைகள் பாதிப்படைந்தன. ஆறுகளில் அளவுக்கு அதிகமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை அறிய புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணம், மீட்பு நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஆகியவற்றை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது: வெள்ளத்தில் அதிகளவிலான மரங்கள் வந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் பார்க்கும்போது மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது போல் உள்ளது. இதன் காரணமாகவும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம். வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு கவாய் கூறினார்.
அப்போது சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, ‘‘இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர், மற்றும் மாநிலங்களின் தலைமை செயலாளர்களிடம் பேசுகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT