Published : 04 Sep 2025 10:18 AM
Last Updated : 04 Sep 2025 10:18 AM
புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறுபான்மையினர் பலர் இந்தியாவில் தஞ்சமடைய வருகின்றனர். அந்த நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களால் அவர்கள் இப்படி இந்தியாவுக்குள் வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கூறிய 6 மதச் சிறுபான்மையினர், அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்குள் வந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து இங்கு தங்கலாம். அவர்களுடைய பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் காலாவதியாகி இருந்தாலும், 6 மதச் சிறுபான்மையினர் இந்தியாவில் தங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாது.
இதற்காக இந்திய குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல், குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவு 2025-ன்படி நேபாளம், பூடான், திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு மே 30-ம் தேதிக்குள் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் சிறப்பு உள்நுழைவு பர்மிட் மூலம் இந்தியாவுக்கு வந்தவர்களும் இங்கு தங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா, மக்காவ், ஹாங்காங், பாகிஸ்தான் வழியாக நேபாளம் மற்றும் பூடான் மக்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 21-வது பிரிவின் படி, பாஸ்போர்ட், விசா போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.
பாஸ்போர்ட், விசா காலம் முடிந்த பிறகு இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இந்தச் சட்டப்பிரிவு 23-ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகள், மருத்துவமனைகளில் சேர்ந்துள்ள வெளிநாட்டினர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காமல் மறைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2024 மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்தது. அந்த திருத்த சட்டத்தின்படி, கடந்த 2014-ம் ஆண்டு டிச.31-ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2014-ம் ஆண்டில் இருந்து 2024 டிச.31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT