Published : 03 Sep 2025 06:27 PM
Last Updated : 03 Sep 2025 06:27 PM
புதுடெல்லி: டெல்லி - என்சிஆரின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ததை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி - என்சிஆரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 207 மீட்டரை எட்டியது. இதனால், கரையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். கரையோர பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், கடைகள், சந்தை பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, 25 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை முடுக்கிவிட்டுள்ளது. தற்போது நான்கு குழுக்கள் களத்தில் உள்ளதாகவும், 14-18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டன்ட் ஞானேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.
யமுனா பஜார் பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிஸ்கட்டுகள், பிரெட் உள்ளிட்டவற்றை உண்டு அவர்கள் பசியாறினர். கனமழை காரணமாக நொய்டாவின் செக்டர் 167 உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி வானிலை ஆய்வு மையம், இன்று (புதன்கிழமை) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பெய்யும். நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த வாரம் முழுவதும் இதேபோன்ற நிலையே நீடிக்கும். செப்.5-ம் தேதி மிதமான மழையும், செப்.6-ம் தேதி இடியுடன் கூடிய மழையும், செப்.7 மற்றும் 8-ம் தேதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT