Published : 03 Sep 2025 04:43 PM
Last Updated : 03 Sep 2025 04:43 PM
புதுடெல்லி: நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் கரேகுட்டா மலைப்பகுதியில் ஆபரேஷன் ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப்பாதுகாப்புப் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது பேசிய அமித் ஷா, “கரேகுட்டா மலைப்பகுதியில், நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கையில் துணிச்சலுடன் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நக்சலைட்டுகள் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது ஒழிக்கப்படும் வரையோ மோடி அரசு ஓயாது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நக்சல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம்.
வெப்பமிக்க சூழல், உயரமான மலை மற்றும் வெடிமருந்துகளின் அபாயங்களுக்கு இடையே, பாதுகாப்புப் படையினர் மிகத் துணிச்சலுடன் நக்சலைட் பகுதிகளில் நுழைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கரேகுட்டா மலைப்பகுதியில் நக்சலைட்டுகளின் ஆயுதக் குவியல் மற்றும் விநியோக அமைப்பை சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோர் துணிச்சலுடன் அழித்தனர்.
நக்சலைட்டுகள் நாட்டின் குறைந்த வளர்ச்சியுடைய பகுதிகளில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை மூடிய அவர்கள், அரசுத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதைத் தடுத்தனர். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக் காரணமாக பசுபதிநாத் முதல் திருப்பதி வரை உள்ள பகுதிகளில் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் புதிய சூரிய வெளிச்சம் உதித்துள்ளது.
நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பலத்த காயம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சத்தீஷ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய், துணைமுதல்வர் விஜய் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT