Last Updated : 03 Sep, 2025 12:03 PM

 

Published : 03 Sep 2025 12:03 PM
Last Updated : 03 Sep 2025 12:03 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஞ்சாபில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது.

இதுபோன்ற கடினமான காலங்களில், உங்கள் கவனமும் மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற போராடி வருகின்றன.

இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை வலியுறுத்தும் விதமாக வீடியோ ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற போராடுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு நிவாரண நிதி உதவியை உடனடியாக வெளியிடுங்கள்.” என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர் மேக வெடிப்புகள் மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் சமவெளிப் பகுதிகள் மூழ்கியுள்ளன. சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளன.

பஞ்சாபில் 1988-க்குப் பிறகு இப்படி ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில் ஓடும் சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவில் உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர், 2.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டி, காங்க்ரா, சிர்மவுர், கின்னோர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x