Published : 03 Sep 2025 07:31 AM
Last Updated : 03 Sep 2025 07:31 AM
புதுடெல்லி: என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்று வருகிறது. இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், தர்பங்கா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியின்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிஹாரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தாய்தான் நமது உலகம். தாய்தான் நமது சுயமரியாதை. பாரம்பரியமிக்க பிஹாரில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. பிஹாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசி உள்ளனர்.
அந்த அவதூறு கருத்து என் தாய்க்கு மட்டும் அவமானம் அல்ல. நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவமானம். இதைக் கேட்டு, பார்த்த பிறகு ஒவ்வொரு தாயும் எப்படி மனம் வருந்தி இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அதே வலி பிஹார் மக்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற கோடிக்கணக்கானவர்களுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக என் தாய் என்னை அவரிடமிருந்து பிரித்தார். என் தாய் இப்போது உயிருடன் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, அவரைப் பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் அவதூறாக பேசி உள்ளனர். சகோதரிகளே, தாய்மார்களே நீங்கள் உணர்ந்த வலியை என்னால் உணர முடிகிறது. இது மிகவும் வேதனையானது. ராயல் குடும்பத்தில் பிறந்த இளவரசரால் ஏழைத்தாயின் வலியை புரிந்துகொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT