Published : 02 Sep 2025 05:25 PM
Last Updated : 02 Sep 2025 05:25 PM
ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கவிதாவை கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர்கள் சோமா பாரத் குமார் மற்றும் டி.ரவீந்தர் ராவ் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிஆர்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய நாட்களில் எம்எல்சி கவிதாவின் செயல்கள், அணுகுமுறை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகளை பிஆர்எஸ் உயர்மட்டக் குழு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. அவரது செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கட்சித் தலைமை உணர்ந்தது. இதனால் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், பிஆர்எஸ் தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ஆகியோர்தான் பொறுப்பு என்று கவிதா நேரடியாகக் குற்றம் சாட்டினார். அவர், ‘ காலேஸ்வரம் திட்டத்தின் முக்கிய விவகாரங்களைக் கையாண்டது ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் தான். கேசிஆரின் கண்களை மறைத்து அவர்கள் பெரும் சொத்துக்களைக் குவித்தனர். அவர்கள் ஊழலின் அனகொண்டாக்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரை கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT