Published : 02 Sep 2025 12:21 PM
Last Updated : 02 Sep 2025 12:21 PM
மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று வரும் முமு்பை ஆசாத் மைதானத்தை காலி செய்யக்கோரி மும்பை போலீஸார் மனோஜ் ஜாரங்கி மற்றம் அவரது குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மும்பை வந்துள்ள ஆதரவாளர்கள் ஆசாத் மைதானம் மட்டுமின்றி, சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும் இந்த போராட்டம் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்களும் கவலை தெரிவித்திருந்தனர். தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கமும் உயர் நீதிமன்றமும் தலையிட வேண்டும் என்று வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வீரேன் ஷா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (செப். 1) விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு, போராட்டம் அமைதியாக இல்லை என்றும் அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜாரங்கியும், அவரது ஆதரவாளர்களும் நாளை (செப்.2) நண்பகலுக்குள் வீதிகளை காலி செய்ய வேண்டும். வீதிகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
போராட்டம் எவ்வளவு 'அமைதியாக' நடைபெறுகிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உயர் நீதிமன்ற கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான நுழைவு வாயில்கள் தடுக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்றத்துக்குள் வருவதை தடுத்தன. முழு நகரமும் தடுக்கப்பட்டுள்ளது.
ஜாரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தை நடத்தவில்லை. எனவே, மகாராஷ்டிர அரசு சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மாநில அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மும்பையைவிட்டு வெளியேறப் போவதில்லை என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் ஜாரங்கி கூறி இருப்பது தெளிவான ஓர் அச்சுறுத்தல்.” என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, போராட்டம் தொடங்குவதற்கு முன் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதால், ஆசாத் மைதானத்தை காலி செய்யுமாறு மனோஜ் ஜாரங்கி மற்றும் அவரது குழுவினருக்கு மும்பை ஆசாத் மைதான காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT