Published : 02 Sep 2025 09:07 AM
Last Updated : 02 Sep 2025 09:07 AM
புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வெளிநாட்டினர் வருகையை முறைப்படுத்த பாஸ்போர்ட் சட்டம்,வெளிநாட்டினர் பதிவு சட்டம், வெளிநாட்டினர் சட்டம், குடியேற்ற சட்டம் போன்றவை அமலில் இருந்தன. அவை ஒன்றிணைக்கப்பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்கப்பட்டது.
இந்த மசோதா கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்டம் 2025 நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: வெளிநாட்டின் வருகையை முறைப்படுத்தும் பல்வேறு சட்டங்களை ஒன்றிணைத்து புதிய சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்படி போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டினரை அழைத்து வரும் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்து ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் கண்டிப்பாக குடியேற்ற அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அகதிகள்-புகலிடம் கோருபவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என 6 பிரிவுகள் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்த பிரிவினருக்கான விதிகள், நிபந்தனைகள், தண்டனைகள் சட்டத்தில் விரிவாக விவரிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கும் இடம், உள்ளூர் தொடர்புகள், இந்தியாவுக்கு வந்த நோக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இதேபோல இந்தியாவும் கடுமையான விதிகளுடன் புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT