Published : 02 Sep 2025 08:37 AM
Last Updated : 02 Sep 2025 08:37 AM
புதுடெல்லி: ஜெர்மனியின் கொலோன் நகரில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்பட்டு வந்தது. இத்துறை நிதிப் பற்றாக்குறையால் கடந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதியுடன் மூடப்பட்டது. இதற்கு முன்பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கடைசியாக கடந்த 2021 ஜுலையில் கிடைத்த நிதியால் மூடப்படும் நிலையிலிருந்து தப்பியது. இந்த நிதி, தமிழ்நாடு அரசின் ரூ.1.25 கோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களின் ரூ.1.5 கோடி, ஐரோப்பிய தமிழர் கூட்டமைப்பின் ரூ. 23 லட்சம் ஆகியவை மூலம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் கவனத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஈர்த்ததால் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்த நிதியுதவியால் ஸ்வென் வொர்ட்மான் என்பவர், ஒப்பந்த முறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2024 அக்டோபர் வரையிலான இவரது பணிக்காலத்தில் புதிதாக மாணவர் சேர்க்கை நடை பெறவில்லை.
இவருக்குப் பிறகு, 60 வருடங்களாக செயல்பட்ட தமிழ் துறையை கொலோன் பல்கலைக்கழகம் மூடியது. மூடப்படுவதற்கு முன், மீண்டும் நிதிகேட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கு உதவிப் பேராசிரியர் வொர்ட்மான் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு எந்த பதிலும் தந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை, கொலோன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்குள்ள கலை மற்றும் சமூகவியல் கல்விப் புலத்தின் கீழ் இந்தியவியல் துறையிலுள்ள தமிழ்ப் பிரிவின் நூலகத்தைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெர்மனிவாழ் தமிழர்கள் வட்டாரம் கூறும்போது, “முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட நூலகம் தமிழகத்திற்கு வெளியே உள்ள இரண்டாவது பெரிய தமிழ் நூலகம் ஆகும். இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், பழைய தமிழ் இதழ்கள், தமிழ் ஓலைச்சுவடிகள் உள்ளன.
இவற்றை யாராவது பாதுகாத்து ஆய்வுகள் செய்ய முன்வந்தால் அவர்களிடம் அளிக்க கொலோன் பல்கலைக்கழகம் தயாராக உள்ளது. தமிழ்ப் பிரிவு தொடரும் என எண்ணி நிதி அளித்த தமிழ்நாடு அரசு உள்ளிட்டோர் அது மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவில்லை. மீண்டும் இந்த தமிழ் பிரிவை செயல்படுத்த, அதில் ஒரு தமிழ் இருக்கை அமைத்தால் திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT