Published : 01 Sep 2025 11:10 PM
Last Updated : 01 Sep 2025 11:10 PM
கவுஹாத்தி: இந்திய தேசத்தின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டால் எந்த சிக்கலும் இல்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
தெற்கு அசாம் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வில் திங்கட்கிழமை அன்று அவர் பங்கேற்றார். இந்த மாவட்டம் 2024 நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை கரீம்கஞ்ச் என அறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும், இந்த மாவட்டம் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போது பத்திரிகையாளர்களை அவர் சந்தித்திருந்தார். “இந்தியாவை தங்கள் தாய் மண்ணாக கருதும் இஸ்லாமியர்கள் எங்கள் உடன் உள்ளனர். அவர்கள் இந்திய தேசத்தின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை.
அதே நேரத்தில் அப்படி செய்வது அவர்களில் சிலருக்கு கடினமாக உள்ளது. அதுதான் சிக்கலே. பராக் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஒருவர் வங்கதேச வானொலி கேட்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அகில இந்திய வானொலியை கேட்டு ரசியுங்கள்” என்றார்.
முன்னதாக, தாகூரின் பாடலை அச்சமின்றி பாடும்போதும், கரீம்கஞ்ச் என்பதற்கும் பதிலாக ஸ்ரீபூமி என சொல்லும் போதும் மதச்சார்பின்மை உணரப்படும் என தனது எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT