Published : 01 Sep 2025 07:25 PM
Last Updated : 01 Sep 2025 07:25 PM
பாட்னா: பாஜகவுக்கு எதிராக அணுகுண்டைவிட பெரிய ஹைட்ரஜன் குண்டு விரைவில் வர இருக்கிறது. வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதன் உண்மையை மக்கள் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டுமுறை பதிவு பெற்றுள்ளவர்கள், மாநிலத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்கள், இந்தியர் என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், வாக்களிக்க தகுதி பெற்றவர்களை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி பிஹாரின் சாசராமில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார். பிஹாரின் 110 சட்டப்பேரவைத் தொகுதிகள், 25 மாவட்டங்கள் வழியாக 1,300 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த விழிப்புணர்வு பயணம் இருந்தது.
இதன் இறுதி நிகழ்ச்சி தலைநகர் பாட்னாவில் இன்று (செப்.1) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ கட்சியின் ஆனி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான், சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "அரசியலமைப்பை பாஜக கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரைக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதிக எண்ணிக்கையில் மக்கள் இதில் பங்கேற்று வாக்கு திருட்டு குறித்து கோஷங்களை எழுப்பினர்.
பாஜகவினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அணுகுண்டைவிட பெரிய ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, நீங்கள் தயாராக இருங்கள். ஒரு ஹைட்ரஜன் குண்டு வர இருக்கிறது. விரைவில் வாக்குத் திருட்டின் உண்மையை மக்கள் கண்டுபிடிப்பார்கள். அப்போது, பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் தனது முகத்தை காட்ட முடியாது. இது உறுதி.
வாக்கு திருட்டு என்றால் அது உரிமைகளின் திருட்டு, ஜனநாயகத்தின் திருட்டு, வேலைவாய்ப்பின் திருட்டு. எனவே, இவ்விஷயத்தில் பிஹார் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT