Last Updated : 01 Sep, 2025 04:17 PM

4  

Published : 01 Sep 2025 04:17 PM
Last Updated : 01 Sep 2025 04:17 PM

20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போது செயல்பாட்டில் உள்ள பல வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படாத சூழலில், வாகன ஓட்டிகள் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவில், ‘அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எத்தனால் இல்லாத பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எத்தனால் கலப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

எரிபொருள் விநியோகத்தின்போது அவர்களின் வாகனங்களின் எத்தனால் பொருந்தக்கூடிய தன்மை குறித்து நுகர்வோருக்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு காரணமாக வாகன இயந்திரச் சிதைவு மற்றும் செயல்திறன் இழப்பு குறித்த நாடு தழுவிய தாக்கம் குறித்த ஆய்வு நடத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், “எத்தனால் கலந்த பெட்ரோல் எந்தவொரு முறையான அறிவிப்பு மற்றும் பொது விழிப்புணர்வு இல்லாமல் கிடைக்கக்கூடிய ஒரே கட்டாய விருப்பமாக மாறிவிட்டது. எத்தனால் கலந்த பெட்ரோல் முற்றிலும் வேண்டாம் என நாங்கள் கேட்கவில்லை. ஆனால், எங்களுக்கு இதர தேர்வுக்கான விருப்பமும் வேண்டும்" என்று அவர் வாதிட்டார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், வழக்கின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர், "இந்த மனுதாரர் யார்?. இவற்றின் பின்னால் ஒரு பெரிய லாபி உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசாங்கம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டது. நாம் எந்த பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாட்டுக்கு வெளியில் இருந்து யாராவது ஆணையிடுவார்களா?" என்று கூறினார். மேலும், எத்தனால் கலப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டார். இறுதியில், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்க மறுத்து, எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் தள்ளுபடி செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x