Published : 01 Sep 2025 01:32 AM
Last Updated : 01 Sep 2025 01:32 AM
புதுடெல்லி: ‘‘கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள், நமது நாட்டை சோதிக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனைகளைப் படைத்துள்ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
பருவமழையின் இந்த வேளையில் இயற்கைப் பேரிடர்கள் நமது நாட்டை சோதித்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்பை பார்த்தோம். சில இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்தன. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. பல குடும்பங்கள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்துள்ளன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் காணாமல் போயின, மக்களின் வாழ்க்கை பெரும் சங்கடத்தில் சிக்கியது. இந்தச் சங்கடங்கள் இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களுடைய உறவுகளை இழந்த குடும்பங்களின் துக்கம் நம் அனைவரின் துக்கம்.
அதேவேளையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை,பிற பாதுகாப்புப் படை வீரர்கள், உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் இரவு பகல் பார்க்காமல் மீட்பு, நிவாரணப் பணிகளில் பாடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தெர்மல் கேமராக்கள், மண்ணுக்குள் புதைந்தவர்களை கண்டறியும் கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் என பல நவீன கருவிகளின் உதவியோடு உடனுக்குடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன, காயமடைந்தவர்கள் வான்வழி கொண்டு செல்லப்பட்டார்கள். பேரிடர் நேரத்தில் ராணுவத்தின் உதவிகள் மிகப்பெரிதாக இருந்தது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையிலும், ஜம்மு கஷ்மீரில் 2 சாதனைகள் நிகழ்ந்துள்ளன. முதலாவது ஜம்மு கஷ்மீரின் புல்வாமாவில் முதல் பகல் - இரவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. முன்பெல்லாம் இதுபோன்ற விளையாட்டுக்கு சாத்தியமில்லை. இப்போது எனது நாடு மாறி வருகிறது. புல்வாமாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இரண்டாவது கேலோ இந்தியா நீர் விளையாட்டுகள் நகரின் தால் ஏரியில் நடைபெற்றது. இந்த விளையாட்டுகளில் நாடு முழுவதும் இருந்து 800-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தனர். ஆண் வீரர்களுக்கு இணையாக இதில் பெண் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் .அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையிலே, மேலும் புதிய விஷயங்களோடு சந்திப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT