Last Updated : 30 Aug, 2025 07:39 PM

 

Published : 30 Aug 2025 07:39 PM
Last Updated : 30 Aug 2025 07:39 PM

இமாச்சல் மணிமகேஷ் யாத்திரையில் கனமழையால் 10 பக்தர்கள் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் யாத்திரை இந்த ஆண்டு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்றும், நான்கு பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணமாக மணிமகேஷ் யாத்திரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிம்லாவில் ஊடகங்களிடம் பேசிய இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறப்புச் செயலாளர் டிசி ராணா, “மணிமகேஷ் யாத்திரையில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்கள் காணாமல் போன பக்தர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

தொடர்ச்சியான மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக, பர்மௌர் மற்றும் சம்பா இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால், உயரமான மலையேற்றப் பாதைகளிலும், நீரோடைகளுக்கு அருகிலும் பக்தர்கள் சிக்கித் தவித்தனர். மீட்புக் குழுக்கள் பக்தர்களை பாதுகாப்பாக மீட்க விரிவான நடவடிக்கைகளைத் தொடங்கின. இதுவரை, சுமார் 6,000 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு சம்பாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

நோய்வாய்ப்பட்ட மற்றும் உடல் ரீதியாக பலவீனமான பக்தர்களை அழைத்துவர ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அவர்களில் பலர் சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சம்பா - பதான்கோட் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மொபைல் இணைப்பு ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் திறந்திருக்கும் இடங்களில் உள்ளூர் நிர்வாகம் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது. சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில், பக்தர்கள் நடைபாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மணிமகேஷ் யாத்திரையின் போது ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக நிகழ்ந்தன" என்று அவர் கூறினார்.

யாத்திரை பாதையில் லங்கார் குழுக்கள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் காவல் துறை உதவி மூலம் உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நடைபாதைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்ற கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை, இமாச்சலப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பருவமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழந்தனர், 40 பேரை காணவில்லை. அதேபோல மழை தொடர்பான சாலை விபத்துகளில் 153 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழையால் மொத்தம் சுமார் ரூ.2,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x