Published : 30 Aug 2025 06:34 PM
Last Updated : 30 Aug 2025 06:34 PM
ஜம்மு: பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று அழைக்கப்படும் பாகு கான், ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் பாகு கான், பாதுகாப்புப் படையினரால் இன்று (சனிக்கிழமை) குரேஸில் சுட்டுக்கொல்லப்பட்டார். சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தவர். ஊடுருவல் முயற்சிகளுக்கு நீண்ட காலமாக மூளையாக செயல்பட்ட பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் இன்று நடந்த ஊடுருவல் முயற்சியின்போது மற்றொரு பயங்கரவாதியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகு கான் ஜம்மு காஷ்மீரில் நடந்த 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர். குரேஸ் பகுதியின் கடினமான நிலப்பரப்பு மற்றும் ரகசிய வழிகள் பற்றிய அறிதல் காரணமாக அவர் ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்பட்டார். இதனால் அவர் அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் முக்கியமான நபராக இருந்தார்.
பாகு கான் ஹிஸ்புல் தளபதியாக இருந்தபோது, குரேஸ் மற்றும் அண்டைப் பகுதிகளிலிருந்து எல்லை வழியாக ஊடுருவல்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் உதவியவர். பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிவந்த பாகு கான் கொல்லப்பட்டது, அப்பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் வலையமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT