Last Updated : 30 Aug, 2025 05:02 PM

 

Published : 30 Aug 2025 05:02 PM
Last Updated : 30 Aug 2025 05:02 PM

ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, "ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் இந்திய விமானப் படை உரையாற்றுவது இதுவே முதல்முறை. பஹல்காமில் தாக்குதல் நடந்த மறுநாள், மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தன. பின்னர், மூன்று படைகளும் தங்களின் செயல்பாட்டு விருப்பங்கள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 24ம் தேதி ஒரு உயர்மட்டக் குழுவிடம் வழங்கின.

மூன்று படைகளின் அனைத்து விருப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நாங்கள் இலக்களை பட்டியலிட்டோம். அந்த வகையில், மூன்று படைகளின் விருப்பங்களின் பட்டியலில் இலக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அவற்றை நாங்கள் ஒன்பதாகக் குறைத்தோம். தாக்குதலுக்கான தேதி, நேரம் மட்டுமே முடிவு செய்ய வேண்டி இருந்தது. மே 5-ம் தேதி அந்த முடிவை எடுத்தோம். உங்களுக்குத் தெரியும், 6ம் தேதி இரவுக்கும் 7ம் தேதி அதிகாலைக்கும் இடையே நாங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டோம்.

இதில், நாங்கள் முக்கியமாகக் கருதுவது என்னவென்றால், தாக்குதல் இலக்குகளை நாங்கள் 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டே முடித்துவிட்டோம். புதுடெல்லியின் உயர்மட்ட உத்தரவுகள் 3 தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தன. பதில் வலுவாக வெளிப்படையாக இருக்க வேண்டும், எதிர்கால தாக்குதல்களை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், முழு அளவிலான மோதலாக விரிவடைவதற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தைப் பெற வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாம் எதிர்பார்ப்பது போலவே, வான் பாதுகாப்பு திறனின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுதர்சன் சக்ரம் அமைப்பு நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தனது தாக்குதலை மே 6-7 தேதிகளில் தொடங்கியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. எனினும், அதனால் இந்திய தரப்புக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில், அதன் விமானப்படை விமானங்கள் பல கடும் சேதத்தை சந்தித்தன. இதனால், பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி, இந்திய ராணுவ உயரதிகாரியை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்ததன் பேரில் இந்தியா தனது தாக்குதலை மே 10-ம் தேதி நிறுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x