Published : 30 Aug 2025 02:40 PM
Last Updated : 30 Aug 2025 02:40 PM
புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்சிபி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம், எங்கள் அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தனர். அவர்கள் இல்லாதது எங்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்.
எந்த ஒரு நிதி ஆதரவும் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை ஒருபோதும் நிரப்பாது. ஆனால், முதல்படியாகவும், ஆழ்ந்த மரியாதையுடனும் ஆர்சிபி அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குகிறது. நிதி உதவியாக மட்டுமல்லாமல், இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான கவனிப்புக்கான வாக்குறுதியாகவும் இதை வழங்குகிறோம்.
இது RCB Cares-ன் தொடக்கமாகும். அவர்களின் நினைவை கவுரவிப்பதன் மூலம் இது தொடங்குகிறது. ஆர்சிபியின் ஒவ்வொரு அடியும் ரசிகர்கள் என்ன உணர்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், எத்தகைய தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும். RCB Cares-ன் கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி, தனது வெற்றிக் கொண்டாட்டத்தை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்தியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT