Published : 30 Aug 2025 06:29 AM
Last Updated : 30 Aug 2025 06:29 AM
புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் செப்டம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்களது முன்மொழிவை வழங்க முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநில நிதியமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறியதாவது: மத்திய அரசின் ஜிஎஸ்டி விகித சீர்திருத்தத்தால் ஒவ்வொரு மாநிலமும் அதன் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் 15-20 சதவீதத்தை இழக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
20 சதவீத ஜிஎஸ்டி வருவாய் இழப்பு என்பது நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமையாக சீர்குலைக்கும். எனவே, வருவாய் நிலைபெறும் வரை 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்து அடுக்குகளைக் குறைப்பதற்கான மத்திய அரசின் தற்போதைய திட்டம் நிகர வரி விகிதத்தை 10 சதவீதமாகக் குறைக்கும்.
இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு என்பது மக்களை மட்டுமின்றி வளர்ச்சி பணிகளையும் கடுமையாக பாதிக்கும். போதுமான வருவாய் ஆதாரம் இல்லை என்றால் அது மாநில சுயாட்சியையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இவ்வாறு கவுடா தெரிவித்தார். வருவாய் பாதுகாப்பைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2024-25 -ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று 8 மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT